“காதலிக்காக எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்பேன்” என்று காதலுக்காக அம்மாவைக் கொன்ற தேவிப்பிரியாவின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அம்மாவை பெற்ற மகளே கொலை செய்தது திருவள்ளூர் மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடந்தது என்று களத்தில் இறங்கி விசாரித்தோம்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதி ஆஞ்சநேயபுரம் எட்டாவது தெருவைச் சேர்ந்தவர் திருமுருகநாதன்.
இவரின் மனைவி பானுமதி. இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என இரு மகள்கள். இரண்டாவது மகளான தேவிப்பிரியா, இந்துக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கல்லூரி விழாவுக்குச் சென்றபோது அங்கு சித்தூர் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைச் சந்தித்திருக்கிறார்.
அப்போது, சுரேஷின் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட தேவிப்பிரியா, பலமுறை அவரிடம் பேசி வந்தார். நாளடைவில் இது காதல் மலர்ந்தது.
இதுதொடர்பாக அவர் அம்மா பானுமதி, யாரிடம் அடிக்கடி பேசுகிறாய் என்று கேட்டிருக்கிறார். அப்போது பானுமதிக்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், தேவிப்பிரியா, நான் ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் என்ற இன்ஜினியரிங் மாணவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அம்மாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
தனது மகளின் விருப்பத்தை ஒத்துக் கொண்டுள்ளார் பானுமதி. சில நாள்கள் கழித்து சுரேஷ் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அப்பா அம்மா என்ன வேலை செய்கிறார்கள் எந்த சமூகம் என்று கேட்டிருக்கிறார்.
அப்போது, சுரேஷ் என்ன சமூகம் என்பதை தெரிந்து கொண்ட பானுமதி, திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் ஆவேசமடைந்த தேவிப்பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினார். சுரேஷை சந்திக்க சித்தூர் சென்று அங்கு மூன்று நாள்கள் தங்கி இருக்கிறார்.
அப்போது, நம்முடைய காதலுக்கு எனது அம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று தேவிப்பிரியா சொல்ல, உனது அம்மாவை கொலை செய்துவிடு என்று சுரேஷ் ஐடியா கொடுத்துள்ளார்.
இதையடுத்து, தனது நண்பர் விவேக் மற்றும் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்த தனது அம்மாவை கொலை செய்ய தேவிப்பிரியா திட்டம் தீட்டினார்.
சகோதரி சாமுண்டீஸ்வரி அறையில் தூங்கிய நிலையில், பானுமதி வாயை பொத்திய கும்பல் அவரை சரமாரியாக குத்தியது. அப்போது, ரத்தக்கறையுடன் வெளியே சென்ற கும்பலை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.
இதனிடையே, பானுமதியின் அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த சாமுண்டீஸ்வரி, 108க்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வந்தவுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பானுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, தேவிப்பிரியாவின் காதலன் சுரேஷயை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், “எத்தனை வருடமாக இருந்தாலும் தேவிப்பிரியாவுக்காக காத்திருப்பேன்.
நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்” என்று கூறியிருந்தார். பானுமதி கொலை வழக்கில் சுரேஷ் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திருவள்ளூர் டி.எஸ்.பி கங்காதரன் கூறுகையில், “பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித் தருவதும் இந்த கொலைக்கு ஒரு காரணம். பெற்றோர்கள் இனியாவது பெண் குழந்தைகளை யாரிடம் பேசுகிறார்கள்.
தனிமையில் என்ன செய்கிறார்கள் என்று கவனம் செலுத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கலாம்” என்றார்.