தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது ஒரு ‘டீல்’ என அண்மையில் தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி கிளை தலைவர் கே.சயந்தன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இந்தநிலையில் இன்று யாழில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், மேற்படி கருத்து சரியானது என்ற சாரப்பட தெரிவித்தார்.
“தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது அதில் நான் இருக்கவில்லை. அதனால் என்ன ‘டீல்’ நடந்ததென்பது எனக்கு தெரியாது. ஆனால் பொதுவான உண்மை உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும்வரை ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட தமிழ் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக வழியில் அரசியல் செய்ய விடுதலைப்புலிகள் இணங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், அவர்கள் சமாதான பேச்சில் இறங்கிய போது, பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல் சக்தி ஒன்று இருக்க வேண்டிய அவசியத்தை நோர்வே போன்ற பல நாடுகளால் ஆலோசனையாக கொடுக்கப்பட்டது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு இரண்டு தரப்பின் தேவைகளும் சந்தித்ததே காரணம்“ என்றார்.