சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7 ஆவது ஊதியக் குழுவின் அரசாணைக்குப் பிறகு, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இத்தைகைய முரண்பாடுகளைக் களையவேண்டி சென்னை டிபிஐ அலுவலகத்தின் முன் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 250 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். இந்த நிகழ்வு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உடன், இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சென்னை டிபிஐ வளாகத்தில் 6ஆவது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் போராட்ட களத்திற்கு இதுவரை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வரோ கண்டுகொள்ளவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்து இருந்தால் இப்படி போராட்ட விட்டுருப்பாரா என ஆசிரியர்கள் கொந்தளித்து வருகினறனர்.