இலங்கையை உலுக்கிய கொலை வழக்கில் சிக்கியவர் மீண்டும் ஈ.பி.டி.பியில்…

நெடுந்தீவு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ரெக்சியன் கொலையில் சந்தேகநபராக கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பியின் அப்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேஸ்வரன் மீண்டும் ஈ.பி.டி.பி அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விசேட பொதுக்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுகின்றது.

இந்த விஷேட கூட்டம் இன்றைய தினம் முழுநாள் கலந்துரையாடல் கூட்டமாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்திலேயே க.கமலேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார்.

க.கமலேஸ்வரன் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக பொறுப்பிலிருந்த சமயத்தில், 2013 வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, வடக்கு மாகாணசபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் ரெக்சியன் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக க.கமலேஸ்வரன் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஈ.பி.டி.பி அறிவித்திருந்தது. நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கமல், விடுவிக்கப்பட்ட பின்னர் பொதுஜன பெரமுனவில் இணைந்து செயற்பட்டு வந்தார்.

இந்தநிலையில், இன்று நடக்கும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம், அவர் மீண்டும் ஈ.பி.டி.பியில் இணைந்து கொண்டதாக கருதப்படுகிறது.ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஈ.பி.டி.பி அரவணைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.