மஹிந்த தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பிரதான எதிரியாக இருக்கிறது.
அவர்கள் இப்போது ரணில் விக்கிரமசிங்கவை விட, சம்பந்தன்,- சுமந்திரன் மீது தான் அதிகம் கடுப்பாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடக்கில் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் கைகொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்த முனைவது ஆச்சரியமில்லை.
வன்னியில் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான போராட்டங்களிலேயே கவனம் செலுத்தியது என்றும், மஹிந்த ராஜபக் ஷவின் பொதுஜன முன்னணி கடந்தவாரம் குற்றம் சாட்டியிருந்தது.
சமூக ஊடகங்களிலும் கூட, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்துகின்ற போராட்டம் பற்றிய காட்டமான விமர்சனங்களைக் காண முடிந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில், மஹிந்த ராஜபக் ஷவுக்கு சவால் விடுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்.
அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மாத்திரமன்றி பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது கூட்டமைப்பு.
அதனால் இப்போது, மஹிந்த தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பிரதான எதிரியாக இருக்கிறது.
அவர்கள் இப்போது ரணில் விக்கிரமசிங்கவை விட, சம்பந்தன்-, சுமந்திரன் மீது தான் அதிகம் கடுப்பாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடக்கில் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் கைகொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர் கள் சுமத்த முனைவது ஆச்சரியமில்லை.
ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை இப்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
51 நாள் அரசியல் குழப்பத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த நல்ல பெயரை இந்த விவகாரத்தினால் இழந்து விடக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
மட்டக்களப்பில் நடந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசியல் குழப்பத்தின் போது, ஜனநாயகத்தைக் காப்பாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என்றும், அதனால் தெற்கிலுள்ள மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் மீது மதிப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
அரசியல் குழப்பம் நிலவிய காலத்தில் கூட்டமைப்பின் உறுதியான நடவடிக்கைகளும், கையாண்ட அணுகுமுறைகளும் வரவேற்பை ஏற்படுத்திய போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் கூட்டமைப்பின் போக்கு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக் ஷ என்ற நபருக்கு கொடுக்க வேண்டுமா இல்லையா- என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. அதனை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
தற்போது பாராளுமன்றத்தில் உள்ள இரண்டாவது பெரிய கட்சி என்ற வகையில்- எதிர்க்கட்சி வரிசையில் உள்ள மிகப்பெரிய கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.
அது தான் தார்மீக அடிப்படை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கூட இதனை பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஆனாலும், மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்த சபாநாயகரின் முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளவுக்கு அதிகமான முயற்சிகள், முன்னெடுப்புகளில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகங்கள் இப்போது ஏற்படத் தொடங்கியுள்ளன.
அதாவது, மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் பதவியில் அமரவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக சுமந்திரன் கூறியிருந்தார். கடிநாயைக் கட்டி வைக்க வேண்டும் என்றும் அவர் சூசகமான முறையில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக நடத்துகின்ற போராட்டம், அதனைத் தக்கவைக்கும் நோக்கத்துக்கானது அல்ல.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் ஐ.தே.கவின் நலன்களை அடைவதற்கு கூட்டமைப்பு துணை போகிறதோ என்ற சந்தேகத்தையே பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் குழப்பம் நிலவிய காலத்தில், ஐ.தே.க.வை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கணிசமாக உதவியிருந்தார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே ஐ.தே.கவை வழிநடத்துகிறார் என்று மஹிந்த தரப்பினர் அப்பட்டமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
அதுமாத்திரமன்றி, ஐ.தே.க மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியானதும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளது என்றும் கூட, கூறினார்கள்.
யார் எதைக் கூறினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஐ.தே.க. மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஜனநாயகத்தை காப்பாற்றுதல் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் கூட்டமைப்பு செயற்பட்டிருந்தாலும், அது ஐ.தே.க.வை காப்பாற்றுதல் என்பதே நடந்தது.
இப்போது எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மல்லுக் கட்டுவதிலும், ஐ.தே.கவின் நலன்களே இருப்பதாக தெரிகிறது.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏன் வழங்கக் கூடாது என்று- ஏழு காரணங்களை முன்வைத்த சபாநாயகருக்கு சுமந்திரன் எழுதியிருந்த ஒரு கடிதத்தில், கூறப்பட்டிருக்கும் சில விடயங்கள், கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு, அப்பாற்பட்டவையாகவே தெரிகின்றன.
அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வது எவ்வாறு என்பதே, அதன் அடிப்படை.
இது, அமைச்சர்கள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஐ.தே.க.வையும் பிணையெடுக்கும் விதத்திலான ஒரு விடயமாகவே தென்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரே அரசாங்கத்தின் தலைவர். அமைச்சரவையின் தலைமைப் பொறுப்பும் அவரிடமே உள்ளது. முப்படைகளினதும் அதிபதியாகவும் அவரே இருக்கிறார்.
ஜனாதிபதி ஒருவர் பாதுகாப்பு, சுற்றாடல், மகாவலி அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்களையும் தான், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, தன்வசம் வைத்திருக்க முடியும்.
ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது, சட்டம், ஒழுங்கு அமைச்சையும் தன்வசம் வைத்திருக்கிறார்.
அதாவது ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்கக் கூடிய அளவுக்கும் அதிகமான அமைச்சுக்களை அமைச்சரவையில் கொண்டிருக்கும் ஒருவராக இருக்கிறார்.
அமைச்சரவையிலும் அங்கம் வகித்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வைத்திருப்பது எப்படி என்று சுமந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு முன்னர், டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்றும், சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது, பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் சட்ட ஆலோசனையைப் பெற்றே பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருந்தார் என்றும் – சுமந்திரனின் கடிதத்தில் வாதிடப்பட்டுள்ளது.
ஆனால், இப்போதைய ஜனாதிபதி ஐந்து அமைச்சுக்களை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக எப்படி அவரது கட்சியைச் சேர்ந்தவரை நியமிக்க முடியும் என்பதே சுமந்திரனின் வாதம்.
தர்க்கரீதியாக இது சரியான கேள்வி தான்.
ஆனால், இந்தக் கேள்விக்கான பதிலின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்போகும் ஆதாயத்தை விட ஐ.தே.க.வுக்கே அதிக ஆதாயம் கிட்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்வசமுள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சை கைவிட்டால், அது ஐ.தே.கவுக்குத் தான் இலாபத்தைக் கொடுக்கும்.
அதைவிட, அமைச்சரவையில் உள்ள 30 பேரில் ஜனாதிபதி உள்ளடக்கப்பட மாட்டார் என்ற சட்ட ஆலோசனையை ஜனாதிபதி பெற்றுக் கொண்டாலும், கூட அது ஐ.தே.கவுக்குத் தான் சாதகமாக அமையும்.
எனவே தான், எதிர்க்கட்சித் தலைவருக்கான இந்தப் போராட்டம், கூட்டமைப்புக்குத் தேவையானதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்ததைப் பயன்படுத்தி, அடைய வேண்டிய பல இலக்குகள் உள்ளன.
அதில் கவனம் செலுத்தாமல், நிரந்தரமில்லாத எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக, கூட்டமைப்பு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கம் பலரிடம் இருப்பதில் தவறில்லை.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
அந்த வாய்ப்புகளை தள்ளி வைத்து விட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான போராட்டத்தில் கவனம் செலுத்துவது தான், விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுமாத்திரமல்ல, இரா.சம்பந்தன் இன்னமும் நம்புகின்ற, புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு மஹிந்த தரப்பின் ஆதரவும் அவசியம்.
அதனைக் குழப்பவே, ஆட்சிக்கவிழ்ப்பு குழப்பம் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் செயல்முறையில் இருந்து மஹிந்த ராஜபக் ஷவை விலக்கி வைக்க முடியாது.
அனைத்து தரப்புகளின் இணக்கப்பாட்டுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவது தான் சம்பந்தனின் திட்டம்.
இப்படியான நிலையில், மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து துரத்துகின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்தால், கூட்டமைப்பின் அந்த இலக்கு எவ்வாறு நிறைவேறும் என்ற கேள்வியும் இருக்கிறது.
இப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்துக்கு அப்பால் கூடுதல் பொறுப்புகள் இருக்கின்றன என்பதை மறந்து விட்டு செயற்படுகிறதா என்ற விமர்சனங்களை யாரும் புறமொதுக்கி விட முடியாது.