திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் தூக்கில் தொங்கிய கணவன்!

நெல்லையில் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மனைவி கோபித்து கொண்டு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தளபதிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் நேசகுமார். இவர் சென்னையில் லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அதேபகுதியில் வசித்து வந்த திவ்யா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக திவ்யாவை சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்த நேசகுமார், திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே சில நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் திவ்யா கோபித்துக்கொண்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.

இதில் மனமுடைந்து காணப்பட்ட நேசகுமார், வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.