டாஸ்மாக் செல்லும், மதுபிரியர்களின் கவனத்திற்கு!

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே ‘பார்’ இயங்கி வருகிறது. தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கு அதிகமான பார்கள் இயங்கி வருகிறது.

இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால், இனி இதை விற்பனை செய்ய கூடாது. கண்ணாடி டம்ளர், சில்வர் டம்ளர், தண்ணீர் பாட்டில்களைத் தான் பயன்படுத்த முடியும். இதனால், பார் உரிமையாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து கூறப்பட்டது. அப்போது, பார் உரிமையாளர்கள் தங்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் விற்பனையின் மூலமே ஓரளவு பணம் கிடைக்கும். அதை நிறுத்தினால், எங்களுக்கு அதிக அளவில்நஷ்டம் ஏற்படும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை (செவ்வாய்கிழமை) முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பிக்க இருப்பதாக தெரிகிறது. எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட உள்ளது.