எச்.ஐ.வி. ரத்த தானம் கொடுத்த வாலிபர் திடீர் மரணம்…! ஊசி போட்டுக் கொன்று விட்டதாக, சகோதரர்கள் கதறல்…

சாத்துாரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பரிசோதனை செய்யாமல், எச்.ஐ.வி. பாசிட்டிவ் ரத்தம் ஏற்றிய விவகாரம் தற்போது, நாட்டையே உலுக்கி வருகிறது. அந்தப் பெண்ணுக்கு, தற்போது, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ரத்தத்தை தானம் செய்த, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த வாலிபர், இந்த செய்தியை அறிந்து, மன உளைச்சலால், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

கடந்த 26-ஆம் தேதி, அவர் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர், அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார், என்று டாக்டர்கள் அறிவித்தனர்.

அவரது உடல் நலம் தேறி வந்த நிலையில், அவர் திடீர் என மரணம் அடைந்தார். இதனைக் கேள்விப்பட்ட அந்த வாலிபரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். எப்படி இந்த மரணம் ஏற்பட்டது? என்ற கேள்வி தற்போது பூதகரமாக எழுந்துள்ளது.

அந்த வாலிபரின் சகோதரர்கள் கூறுகையில், “எங்கள் சகோதரன் விஷம் சாப்பிட்ட பிறகு, கமுதியிலும், டாக்டர்கள் அவரைக் காப்பாற்ற அக்கரை கொள்ளவில்லை. மதுரையில் அனுமதித்த போது, அங்குள்ள டாக்டர்களும் அலட்சியமாக இருந்தனர். இந்த விவகாரத்தில், சிக்கியுள்ள பல அரசு மருத்துவமனை டாக்டர்களையும், பணியாளர்களையும் காப்பாற்ற, விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டனர்.

இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். பிரேதப் பரிசோதனையை, முழுதுமாக வீடியோ எடுக்க வேண்டும். அது வரை, உடலை வாங்க மாட்டோம்”, என்று, போர்க் கொடி துாக்கி உள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது, ஏற்கனவே இருந்த பரபரப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.