மனைவி தாலியை அணியாததால் பேனர் வைத்து போராடிய கணவர்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் எருக்கலகோட்டை என்ற கிராமத்தில், அறிஞர் என்றவரும், அவரது மனைவி பரிமளா என்பவரும் வசித்து வந்தனர். பரிமளா தவிடு வியாபாரம் செய்பவர். அவர் கடந்த டிசம்பர் 27 ந் தேதி தவிடு விற்ற பண பாக்கியை வாங்க செல்கையில், சிலர் அவரை அநியாயமாக தாக்கி, அவரது தாலியை அறுத்து, பறித்து தூக்கி எறிந்துள்ளனர்.

இதுகுறித்து, அறிஞர் மற்றும் பரிமளா இருவரும், அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால், குற்றம் சுமத்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பரிமளா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அறிஞர், ஒரு பதாகையை எருக்கலக்கோட்டை கடைவீதியில் கட்டி, பரிமளாவின் தாலியை தனது கழுத்தில் அணிந்து கொண்டு, தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

எதற்காக இப்படி செய்கிறீர்கள் என கேட்பதற்கு, “தாலியை அறுத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது மனைவி தாலியை அணியை மறுக்கிறார்” என எழுதியிருக்கும், அந்த பதாகையை காட்டுகிறார்.

இந்த தாலிக்கு நீதி கேட்கும் போராட்டத்தினால், அப்பகுதி மக்களிடையே வித்தியாசமான மனப்பான்மையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.