எனக்கு இப்போது மனவலிமை தேவை… தந்தையின் மறைவால் வாடும் ரஷித் கான்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் தந்தை நேற்று காலமானதைத் தொடர்ந்து, தான் மிகுந்த வேதனையில் இருப்பதாக ரஷித் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இளம் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் ரஷித் கான் ஐ.பி.எல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக் போன்ற தொடர்களிலும் தனது பந்துவீச்சின் மூலம் முத்திரை பதித்துள்ளார்.

இந்நிலையில், ரஷித் கான் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் லீக் தொடரில் விளையாடி வருகிறார். இவரது தந்தை நேற்றைய தினம் காலமானதைத் தொடர்ந்து, ரஷித் கான் உடனடியாக தனது தாய்நாட்டிற்கு சென்றுள்ளார்.

தந்தையின் மறைவை எண்ணி மனமுடைந்த ரஷித் கான், ட்விட்டர் பக்கத்தில் தனது சோகத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘இன்று, நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்துவிட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை.

நான் மனவலிமையாக இருக்க வேண்டும். என்று நீங்கள் (என் தந்தை) எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் என தெரிந்துவிட்டது. இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் தேவை. நான் உங்களை miss செய்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது நண்பரின் தந்தை மறைவு துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், ரஷித் கானின் குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், சக கிரிக்கெட் வீரரான முகமது நபி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.