வீதியில் தன்னந்தனியாக சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி….!

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை வழிமறித்த இருவர், அவர் மீது வாளால் வெட்டியதில் அவர் கையில் காயமடைந்தார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் மூளாயில் இடம்பெற்றது.

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவர்களிடம் இருந்து வாளைப் பறித்து நேரடியாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சென்று அதை ஒப்படைத்தார்.இச்சம்பவத்தில் மூளாய் முன்கோடையைச் சேர்ந்த அ.யசிந்தன் (வயது-33) என்ற இளைஞனே காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 7 மணியவில் குறித்த இளைஞன் மூளாய் – மாவடி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்தபோது, மூளாய் பேக்கரிக்கு சமீபமாக வழிமறித்த இருவர் அவரை வாளால் வெட்ட முற்பட்டனர்.இதன்போது அவர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் கையில் வாள்வெட்டுக் காயம் ஏற்பட்டது.

வெட்டுக் காயத்துடனும் போராடிய இளைஞன் அவர்களிடம் இருந்து வாளைப் பறித்தெடுத்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்த முதியவர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தப்பிச் சென்றனர். அவர்கள் போதையில் காணப்பட்டனர் எனக் கூறப்பட்டது.காயமடைந்த இளைஞன் வாளுடன் சென்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அதை ஒப்படைத்துவிட்டு முறைப்பாடு பதிவு செய்தார். தாக்குதலுக்கு இலக்கான முதியவரும் முறைப்பாடு செய்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். தாக்குதலாளிகளின் இரு துவிச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மூளாய் வேரத்தைச் சேர்ந்தவர் எனவும், மற்றையவர் மூளாய் பிள்ளையார் கோயிலடியைச் சேர்ந்தவர் எனவும் அந்த இடத்தில் நின்றவர்களால் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நேற்றிரவு வரை எவரும் கைது செய்யப்படவில்லை. தாக்குதலுக்கு இலக்கானவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.