உத்தரபிரதேச மாநிலத்தில் ஈவ்டீசிங்கை தடுத்த பெண்ணை வீட்டுக்குள் புகுந்த கும்பல் நிர்வாணமாக்கி அடித்த உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோபிகஞ்ச் மாவட்டத்தில் பதோனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பெண்களை ஒரு கும்பல் ஈவ்டீசிங் செய்து வந்தது.
சம்பவத்தன்று இக் கும்பலை சேர்ந்த லால்சந்த் யாதவ் என்பவர் ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்து கொண்டிருந்தார். அதை அக்கிராமத்தை சேர்ந்த நெசவு தொழில் செய்யும் பெண் தடுத்து தட்டிக் கேட்டார்.
இதனால் லால்சந்த் யாதவ் ஆத்திரம் அடைந்தார். தனது கூட்டாளிகள் 3 பேருடன் அப் பெண்ணின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தார். அங்கு தனியாக இருந்த பெண்ணை அவர்கள் அடித்து உதைத்தனர்.
பின்னர் அவரது உடலில் இருந்த துணிகளை வலுக்கட்டாயமாக அகற்றி நிர்வாண மாக்கினர். அவரை கிராமத்தில் ஊர்வலமாக இழுத்துச் சென்று அவமானப்படுத்தினர்.
இந்த கொடூர செயலை கிராமத்தினர் சிலர் ஈவு இரக்கமின்றி தங்கள் செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக பரவ விட்டனர். இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவன் கைது செய்யப்பட்டான்.






