நடுரோட்டில் அடித்து கொண்ட அதிமுகவினர்….!

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனின் மகன் கோபாலகிருஷ்ணன் இன்று பிற்பகல் 12.50 மணி அளவில், டி.என்.37 சி.சி.7 என்ற எண் கொண்ட இனோவா காரில் தனது நண்பருடன் ,டவுன்ஹால் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டி.என்.10 டபுல்யூ 6667 என்ற எண் கொண்ட மிஷுபிஷி காரில் அதிமுக கொடியுடன் வந்த காரில் இருந்தவர் ஏன் போன் பேசி கொண்டே வாகனத்தை ஓட்டுகிறாய் என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணனுடன் காரில் இருந்து இறங்கி, கேள்வி கேட்டவரை தாக்கிய நிலையில், அவர்  நான் சட்டமன்ற உறுப்பினரின் கார் ஓட்டுநர் என கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி நிலையில், அங்கு இருந்தவர்கள் ஒன்று கூடியதால் மிஷுபுஷி காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். பொது இடத்தில் ஒரே கட்சியை சேர்ந்தவர் சண்டை போட்டு கொண்டது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. பின்னர் சட்டமன்ற உறுப்பினரின் மகன் இதனை பெரிது படுத்தி செய்தி வெளியிட வேண்டாம், ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஏதோ நடந்துவிட்டது விட்டு விடுங்கள் என கூறியபடி அங்கிருந்து கிளம்பினார்.