தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சாவித்திரி (வயது 34). இவரது கணவர் முருகப்பன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் தனது 10 வயது மகள் அபிநயாவுடன் சாவித்திரி வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக சாவித்திரி விரக்தியுடன் இருந்துள்ளார். வாழ்க்கையில் வெறுப்படைந்த சாவித்திரி நேற்று இரவு தனது மகளை தேவகோட்டையில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு காரைக்குடிக்கு வந்துள்ளார்.

பின்னர் தனது வீட்டில் அவர் வி‌ஷம் குடித்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு வர சாவித்திரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளனர்.

உடனே அவர்கள் சாவித்திரியை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சாவித்திரி வீட்டை சோதனை செய்ததில் தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியதாக தெரிகிறது. அவர் எதற்காக தற்கொலை முயற்சி செய்தர் என்ற முழு தகவல் வெளிவரவில்லை.