வாணியம்பாடி அருகே பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து, 11வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெரும் ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகாலட்சுமி. அதே பகுதியில் இயங்கி வரும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இவர், அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளில் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு வந்த மாணவி மகாலட்சுமி, பள்ளியின் மூன்றாவது மாடிக்கு சென்ற நிலையில், திடீரென அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் தலை தலையில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கும், மாணவியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை, தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துசெல்ல முயன்றனர். அப்போது மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் பள்ளி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இந்த விபத்து குறித்து பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சடலத்தை எடுக்காவிடமல் தொடர் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் போலீசார் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆலங்காயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை தள்ளி விடப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி பள்ளியில் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.