இந்தியாவை சமாளிக்க முடியவில்லை: ஆஸ்திரேலிய கேப்டன் குமுறல்

வார்னர், ஸ்மித் இல்லாத அனுபவமற்ற அணியாக இருக்கும் நாங்கள், இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன்  தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 26 அன்று மெல்போர்னில் நடந்த பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை, தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் பின்தங்கியதற்கு, பெரும்பாலான இந்திய வீரர்களின் டாப் கிளாஸ் வேகப்பந்துவீச்சு, அனுபவமான பேட்டிங் காரணம் என்று முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்து சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியை இந்தியா சமன் செய்துவிட்டாலோ அல்லது வென்றுவிட்டாலோ, கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும்.

இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியதாவது:

அணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத வெற்றிடத்தை நாங்கள் உணர்கிறோம். இப்போது அனுபவமற்ற அணியாக நாங்கள் இருக்கிறோம். இதனால் எங்களுக்குப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கிறது. இந்தியாவின் டாப்கிளாஸ் பந்துவீச்சை நாங்கள் எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பலரின் பந்துவீச்சை இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொண்டதில்லை.  இந்திய அணி போன்ற டாப் கிளாஸ் பந்துவீச்சு இருக்கும் இடத்தில், அனுபவமில்லாத எங்களின் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது சிரமமே. இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போதுதான் வீரர்கள் அனுபவத்தைப் பெற முடியும் என்று நினைக்கிறேன்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக பேட் செய்தனர், அப்போது இருந்தே நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம். ஆடுகளத்தைப் பார்த்தவுடன் இது மோசாக இருக்கிறது என்பதை உணர்ந்தோம், அதற்கு ஏற்றார்போல், இந்திய அணியின் துல்லியமான வேகப்பந்துவீச்சுக்கு எதிராகப் போராடினோம். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்தால், இதோபோன்று இந்தியாவுக்கும் நடக்கலாம். ஒட்டுமொத்தமாகக் கூறினால், எங்களை வெளியேற்றி விட்டார்கள். வெற்றிக்கு தகுதியானவர்களாக மாறிவிட்டனர் இந்திய அணியினர். புகழ் அனைத்தும் இந்திய அணிக்குத்தான். இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.