சில ஆளுனர்களே பதவி விலகினர்!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய சில மாகாண ஆளுனர்கள் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை டிசெம்பர் 31ஆம் நாளுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது செயலர் மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கமைய, வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, தமது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கேட்டிருப்பதாகவும், அவர் கூறியிருந்தார்.

எனினும், கிழக்கு மாகாண ஆளுனர் றோகித போகொல்லாகம, பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பதவியில் இருந்து விலகுமாறு, சிறிலங்கா அதிபரிடம் இருந்து தமக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வடக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து றெஜினோல்ட் குரே நீக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான தயார்படுத்தல்களில், அவருக்கு சார்பாக சில தரப்புகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சில அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் ஊடாக, இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.