மரணப்படுக்கையில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு தாயின் கடைசி முத்தம்…

அமெரிக்காவில் மூளை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, தாய் கொடுத்த இறுதி முத்தம் தொடர்பான புகைப்படம் மனதை உருக்கியுள்ளது.

ஏமன் நாட்டைச் சேர்ந்த அலி ஹசன்-ஷைமா தம்பதியின் இரண்டு வயது குழந்தை அப்துல்லா ஹசன். அப்துல்லா 8 மாத குழந்தையாக இருந்தபோது, ஏமனில் நடந்து வரும் போர் காரணமாக அலி ஹசன்-ஷைமா தம்பதி எகிப்து நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் அப்துல்லா மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சுவாச நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் குழந்தையின் தந்தை சிகிச்சைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு வந்தார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை அப்துல்லாவின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனால் தாயார் ஷைமாவை அழைத்து வருமாறு மருத்துவர்கள் அலி ஹசனிடம் கூறியுள்ளனர்.

ஆனால், அமெரிக்காவில் 7 நாடுகளின் பயணிகள், அகதிகள் நுழைய இருந்த தடை காரணமாக ஷைமாவினால் உடனடியாக தனது குழந்தையை பார்க்க முடியவில்லை. எனினும் தொடர்ச்சியாக பல போராட்டங்களை சந்தித்த பின்னர், ஷைமாவிற்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மரணத்தின் இறுதி நிமிடங்களில் இருந்த தனது மகனை பார்த்த ஷைமா கண்ணீருடன் முத்தம் கொடுத்தார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி காண்போரின் மனதை உலுக்கியது.

அப்துல்லாவின் இறப்புக்கு பின் அவனது தந்தை அலி ஹசன் கூறுகையில், ‘எங்களது இதயம் உடைந்தது. எங்களது வாழ்வின் ஒளியாகிய எங்கள் குழந்தைக்கு நாங்கள் இறுதி விடை அளிக்க வேண்டும்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.