சசிகலா, தினகரனை காவலில் எடுத்து விசாரிப்போம்! அமைச்சர் அதிரடி!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா காலமானார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவிக்க 2017, செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகியுள்ளது என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது, இன்று நிலை என்ன?. சென்னையை போல் திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும்.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். தமிழக அரசு, தேவை என கருதினால் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா இறப்பிற்கு சசிகலா, தினகரன் தான் காரணம் என ஏற்கனவே அமைச்சர்கள் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது, தேவைப்பட்டால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.