ஹல்துமுல்லை, சோரகுனே ஒக்வேல் தோட்டத்தில் வசித்து வந்த 69 வயதான நபர், கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது 72 வயதான மனைவியை ஹல்துமுல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியான முத்துசாமி பெரியசாமி என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.தந்தை உயிரிழந்துள்ளதாக மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து மரண விசாரணைக்கு சென்றிருந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கே.ஆர்.ரத்தனவீர, இந்த மரணம் ஒரு கொலை சம்பவம் என கூறியதால், நீதவான் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நீதவான் விசாரணைகளின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஹல்துமுல்லை பொலிஸார், கொலை செய்யப்பட்ட நபர் மதுபானத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் பணம் தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மனைவியை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். கணவன் நித்திரையில் இருக்கும் போது வாயை மூடி,கயிறை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்திய கயிற்றை வழக்கு தடயமாக பொலிஸார் கைப்பற்றினர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.