சிங்கப்பூரின் முடிவால் தமிழர்கள் மகிழ்ச்சியில்!

சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் தகவல் தொழி நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்காக தமது அரசாங்கம் தீர்மானம் கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிங்கப்பூரை நவீனமயமாக்கிய தமிழ் சமூகத்தினர்” என்ற தலைப்பில் அண்மையில் நூல் வெளியீட்டு விழா ஒன்று சிங்கப்பூரில் நடந்தது.

இதனை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டுவைத்தார்.

இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக கலந்துகொண்டபோதே அமைச்சர் ஈஸ்வரன் மேற்படி கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“சிங்கப்பூரில் தமிழ் என்றும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என அரசு தீர்மானம் கொண்டுள்ளது. அதனால் தான் பார்லிமெண்டில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், கல்விக் கூடங்களில் பயிற்றுமொழியாகவும் உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் தமிழை என்றும் துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்.” என்றார்.

அமைச்சரின் இந்த பேச்சின்போது சபையிலிருந்தோரின் கைதட்டல் ஒலி வானைப்பிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று என்பதுடன் அங்குள்ள கல்விக்கூடங்களிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி சிங்கப்பூர் நாட்டின் பணத்தாள்களிலும் தமிழ் மொழி முக்கிய இடத்தினைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.