கொடிகட்டி பறக்கும் இந்திய கிரிக்கெட்! கோட்டைவிட்ட நம்மவர்கள்! யதார்த்தமா? திட்டமிட்டதா?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 3 போட்டிகளில் முடிவில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 13 இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை, பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழக வீரர் ஒரே ஒருவர் தான் இடம்பிடித்துளளார். அவரும் சந்தேகத்தில் உள்ளார்.

விராட் கோலி தலைமையிலான நான்காவது போட்டிக்கான அணியில் ரஹானே, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது 13 பேர் கொண்ட பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். நாளை போட்டி தொடங்கும் போது, அஸ்வின் உடற்தொகுதியை கவனத்தில் கொண்டு களத்தில் விளையாடும் 11 பேரில் அஸ்வின் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த போது முதல் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின் என மூன்று தமிழக வீரர்கள் களம் இறங்கினார்கள். ஆனால் அதே தொடரில் தினேஷ் கார்த்திக் இரண்டு போட்டிகளில் சொதப்ப உட்கார வைக்கப்பட்டார். அஸ்வின் காயத்தினால் வெளியேறினார். முரளி விஜய் சொதப்ப அவரும் நீக்கப்பட்டார். அதே போல 20 ஓவர் அணியில் விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்து இருந்தார்கள். போதிய வாய்ப்பு அளிக்கப்படாமலே வெளியே அனுப்பப்பட்டார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலியே தொடரில் விஜய், அஸ்வின் வந்தார்கள். ஆனால் விஜய் சொதப்பல், அஸ்வின் காயத்தால் வெளியே வேடிக்கை பார்க்கிறார்கள். தொடக்க வீரர்கள் ராகுல், விஜய் இருவருமே சொதப்பலாக விளையாட நான்காவது போட்டியில் ராகுலுக்கு மட்டும் இடம் அளித்துள்ளார்கள். இது யதார்த்தமானதா அல்லது திட்டமிட்டதா? கோலிக்கும் ரவி சாஸ்திரிக்கு மட்டுமே தெரியும். தமிழகத்தில் இருந்து சென்றவர்களின் சர்வதேச ஆட்டம் அதிஷ்டமில்லாததாகவே உள்ளது.