மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னங்கருப்பட்டி தயாரிப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆலாங்கொம்பு, தென்திருப்பதி, மோத்தேபாளையம், ஓலப்பாளையம், நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தென்னங்கருப்பட்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தென்னை மரங்களில் அதன் உச்சியில் உள்ள பாளைகளை செதுக்கி அதில் பானைகளை கட்டி உள்ளனர்.
அதன் பின்னர் பானைகளில் தேங்கியுள்ள பதநீரை இறக்கி அதனைபெரிய பாத்திரத்தில் ஊற்றி விறகுஅடுப்பில் வைத்து எட்டு மணி நேரம்வரை சுண்ட காய்ச்சுகின்றனர்.
குறிப்பிட்ட பதம் வந்ததும் அந்தபாகை அச்சுகளில் ஊற்றி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.இதில், ஒரு சிட்டிகை விளக்கெண்ணை தவிர எவ்வித ரசாயன கலப்பும் செய்யப்படுவதில்லை.
தென்னங்கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து எலும்புகளையும் உறுதிகொண்டதாக்கும், உடல் வனப்பையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஒரு தென்னந்தோப்பில் 50 முதல் 60 லிட்டர் பதநீர் கிடைத்தால் 10 முதல் 12 கிலோ வரை தினசரி தென்னங்கருப்பட்டி தயாரிக்க இயலும் என தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள், தயாரிக்கப்படும் கருப்பட்டிகளை வாரம் ஒரு முறை சிறு வியாபாரிகள் நேரிடையாக வந்து வாங்கி செல்வதாக கூறுகின்றனர்.
மேலும், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட கிலோ ரூ.60விற்பனையாகி வந்த கருப்பட்டிதற்போது பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு தேவை அதிகரித்து தற்போது ரூ.110 விற்பனையாவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த தென்னங்கருப்பட்டிகள் பெரிய கடைகளில் இரு மடங்கிற்கும் மேலாக ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் தென்னங்கருப்பட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.
தயாரிப்பு செலவு நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளதால் தென்னங்கருப்பட்டிக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.150 என நிர்ணயிக்க வேண்டும் என கருப்பட்டி தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.