மலையத்தில் பிறந்த நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் தனது கடமைகளை யாழில் பெறுப்பேற்றார்

நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று  காலை அவர் உறுதி உரை எடுத்துக்கொண்ட நிலையில் அவர் இன்றைய தினம் தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போலை வரவேற்றனர். கடமைகளைப் பொறுப்பேற்ற அவர், வழக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.

மலையகத்தில் பிறந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். அதன் ஊடாக மலையகத்தில் பல துறைசார் விற்பன்னர்களை உருவாக்கியவர். பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையைத் தொடர்ந்த அவர், சட்டத்தரணியாக 7 வருடங்கள் சேவையாற்றினார்.

இந்த நிலையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் அவர் மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சுமார் 170 வருடங்கள் கொண்ட இலங்கையின் மலையக வரலாற்றில் மூன்றாவது நீதிபதியாக அந்தோனி சாமி பீற்றர் போல் நியமிக்கப்பட்டார்.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் அவர் 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் சேவையை நிறைவேற்றிய அவர், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக இன்று கடமைகளைப் பொறுப்பெடுத்தார்.

“அக்கரைப்பற்று நீதிமன்றானது எனக்குப் பல்கலைக்கழகமாகவே தென்படுகின்றது. இதனால்தான் என்னவோ புதிதாக நியமனம் பெறும் நீதிபதிகளை முதல் கடமையினைப் பொறுப்பேற்க அக்கரைப்பற்றுக்கே அனுப்புகின்றனர்” என்று நீதிபதி போல், தனது பிரியாவிடையின் போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.