இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், புஜாரா சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி 303 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய ராகுல் மூன்றாவது போட்டியில் நீக்கப்பட்டார். தொடர்ந்து இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக களமிறங்கிய அவர், 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் தொடரில் ராகுல் 100 ரன்களைக் கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து களமிறங்கிய புஜாரா தொடக்கவீரர் மயங் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து ரன் குவிப்பில் வேகம் காட்டிய மயங்க் அகர்வால் 96 பந்துகளில் தனது 2-வது அரை சதத்தை எட்டினார். அதன்பின் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிக்கத் தொடங்கியதால் ஸ்கோர் உயரத்தொடங்கியது. இந்நிலையில் நாதன் லயன், ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய அகர்வால் 77 (7 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். புஜாரா அகர்வால் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 116 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி 23 ரன்களிலும், ரஹானே 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் சதத்தை நோக்கி முன்னேறிய புஜாரா, 199 பந்துகளில் சதமடித்தார். இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். ஒட்டுமொத்தமாகத் அவர் 18-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். மேலும் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த விஹாரியும், ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்களிலும், விஹாரி 39 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், லயன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.