வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சுவிஸ் இளைஞர்!

சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த இளைஞர் ஒருவர் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பில் இணைந்து செயல்பட்டதால் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டு வருகிறார்.

துருக்கி நாட்டவரும் சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவருமான 24 வயது இளைஞரை ஈராக்கிய ராணுவமானது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதியில் இருந்து சிறைப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஈராக்கிய தலைநகர் பாக்தாதில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு குறித்த இளைஞரை உட்படுத்தியுள்ளனர்.

இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து குறித்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகிழக்கு சுவிஸ் நகரமான Arbon பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்த பின்னர் தமது பெயரை Obeida என மாற்றியுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் குறித்த நபர் இணைந்ததாக 2015 ஆம் ஆண்டு வெளியான தகவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுவிஸ் அரசு அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு குறித்த குற்றவியல் நடவடிக்கையானது முடக்கப்பட்டாலும், சுவிஸ் நாட்டுக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது அவர் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், குறித்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறும் அந்த இளைஞர், சிரியாவில் உள்ள பயிற்சி முகாமில் இதை கற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.