மனைவி, குழந்தையை சாலை விபத்தில் இழந்த பிரித்தானியர்!

குடும்பத்தாருடன் ஐஸ்லாந்து நாட்டில் சுற்றுலா சென்ற பிரித்தானியர், மனைவி மற்றும் குழந்தையை சாலை விபத்தில் பறிகொடுத்தது தமக்கு நினைவில்லை என விசாரணையின்போது தெரிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இந்தியரான 39 வயது ஸ்ரீ ராஜ் லாதூர்யா, கடந்த வாரம் ஐஸ்லாந்து நாட்டில் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கி தமது குழந்தை, மனைவி மற்றும் சகோதரரின் மனைவி உள்ளிட்ட மூவர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த நிலையில் காயங்களுடன் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீ ராஜ் லாதூர்யாவிடம் விசாரணை மேற்கொண்ட பொலிசார்,

அந்த விபத்து தொடர்பில் தமக்கு எதுவும் நினைவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

தலைநகர் Reykjavik பகுதியில் உள்ள Nupsvotn பாலத்தில் இருந்து சுமார் 35 அடி ஆழத்தில் பாய்ந்த காரில் இருந்து லாதூர்யாவின் மனைவி மற்றும் குழந்தை, சகோதரரின் மனைவி உள்ளிட்ட மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் லாதூர்யாவின் சகோதரர் மற்றும் அவரது 2 குழந்தைகள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த பலரும், லாதூர்யாவின் கார் குறிப்பிட்ட வேகத்தை விடவும் அதிக வேகத்தில் சென்றதாகவும், அதுவே விபத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்துள்ள விசாரணையில் விபத்து தொடர்பான உண்மையான காரணம் வெளியாகலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லண்டனில் உள்ள வங்கிகளில் லாதூர்யா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பிரபலமான கணக்காளர்கள் என கூறப்படுகிறது.