ஐயப்பன் கோவில் விவகாரத்தில் சீமான் எழுப்பிய கேள்வி!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதற்கு பல இந்து அமைப்புகளும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் யாரும் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று முன்தினம் காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்துக்குள் நுழைந்து 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நடந்த கலவரத்தில் பாரதிய ஜனதா கட்சியினரும் மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

கேராளாவில் சபரிமலைக்கு பெண்பக்தர்கள் செல்வதை எதிர்த்து நடந்துவரும் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால் சாமி முன்பும் அனைவரும் சமம் தானே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், சீமான் கூறுகையில், பெண்மையை போற்றாத எந்த சமூகம் பெருமை அடைந்தது இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால், சாமி முன்பும் அனைவரும் சமம் தானே என்று கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக அரசுதான் ஐயோதியில் ராமர் கோவிலையும், கேரளாவில் ஐயப்பன் கோவிலையும் வைத்து அரசியல் செய்கின்றது என்று குற்றம் சாட்டினார்.