நோய்வாய்ப்பட்ட காதலன்… காதல் மலர்ந்த இடத்திலேயே அதிர்ச்சி முடிவெடுத்த இளம் பெண்!

திருமணம் செய்துகொள்ள இருந்த காதலருக்கு ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பால் மனம் உடைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகம் என்பவர் திருச்சியில் உள்ள ஆயுதப் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் சேலம் பகுதியைச் சேர்ந்த தேவ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ராமேஸ்வரத்தில் பணியாற்றி வந்தபோது காதல் மலர்ந்துள்ளது.

தற்போது இருவரும் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவலர் தேவ் சிறுநீரகப் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அறுவைசிகிச்சை நடக்க உள்ள நிலையில் செண்பகம் அவரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்துள்ளார்.

இதனிடையே இன்று அதிகாலை ராமேஸ்வரம் வந்த செண்பகம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த இவர் சாலையோரம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவலர் செண்பகத்தை ராமேஸ்வரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சையின்போது செண்பகம் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள இருந்த காதலர் தேவுக்கு ஏற்பட்ட பாதிப்பால் மனமுடைந்த செண்பகம், தங்கள் காதல் மலர்ந்த இடமான ராமேஸ்வரத்திலேயே தன் உயிரை விட நினைத்து தற்கொலைக்கு முயன்றதாகப் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ராமேஸ்வரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.