திருப்பூர் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் முருகேசன்- பத்மாவதியின் மகள் சூர்யா.அவர் முதலிபாளையம் சிட்கோவில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது சூர்யா அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நவீன்குமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில், பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் போலீசார் இருவரது பெற்றோர்களையும் வரவழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதன்பின்னர் சூர்யா தனது கணவர் நவீன்குமார் வீட்டில் வசித்து வந்தார். அப்பொழுது சூர்யாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நவீன்குமார் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மனைவி இறந்துகிடந்ததை பார்த்த கணவன் நவீன் கதறி அலறியுள்ளார். மேலும் சூர்யாவின் இடது கையில், ‘நான் உன்னை விட்டு தனிமையில் பிரிந்து செல்ல மனம் இல்லை. என்னுடன் வந்து விடு’ என எழுதி வைத்து உள்ளார்.அதுமட்டுமின்றி வங்கி பாஸ்புத்தகத்தில், ‘‘நவி மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் செல்கிறேன். என்னுடன் வந்து விடு’’ எனவும் எழுதி வைத்துள்ளார்.
திருமணமான ஒரு மாதத்திலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.