தென்மராட்சி – சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பெயரைக் குறிப்பிட்டு பல கிராமங்களில் வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலித்த நபர் ஒருவர் இன்று (05) காலை எழுதுமட்டுவாழ் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை எழுதுமட்டுவாழ் வடக்கு கிராம மக்களிடம் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பெயரை குறிப்பிட்டு பணம் வசூலிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதன்போது, குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் கொண்ட கிராமவாசி ஒருவர் இது தொடர்பில் கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்குவந்த கிராம அலுவலர், இளைஞர்களுடன் இணைந்து குறித்த நபரை துரத்திச் சென்று எழுதுமட்டுவாழ் மயானப் பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.இவ்வாறு, மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என்பது அவரது அடையாள அட்டையின் மூலம் தெரியவந்துள்ளது.