தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான கோபத்திற்கு பழி தீர்த்த மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கொண்ட கோபத்திற்கான பழி தீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பாக ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. அவர்களை பிரதமரோ, அமைச்சர்களோ நியமிப்பதில்லை. தற்போது கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற ஏறக்குறைய ஒருவருடம் மட்டுமே உள்ளது. அதற்கிடையில் ஆளுநர்களை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனால் ஜனாதிபதி தமது விருப்பத்துக்கு அமைவாக அதை செய்துள்ளார்.

அதில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக, ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்த ஹிஷ்புல்லாவை நியமித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது கொண்ட ஆத்திரத்தை தீர்த்து ஜனாதிபதி சாதித்து விட்டார் என்பதே உண்மை என குறிப்பிட்டுள்ளார்.