இரண்டாக உடைகிறது ஜியோமி!

சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, தனது புகழ்பெற்ற ரெட்மி மொபைல்களுடன் தனி நிறுவனம் தொடங்கி, இரண்டாக பிரிய முடிவெடுத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஜியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம், தனது ரெட்மி மொபைல்கள் மூலம் இந்தியாவில் கால் பதித்தது. வெறும் 6,000 ரூபாயில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வலுவாக கால் ஊன்றியது. இதனால், குறைந்த காலத்தில், சாம்சங், போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக உருவெடுத்தது ரெட்மி.

இப்போது ஜியோமி நிறுவனம், ரெட்மி மட்டுமல்லாமல் எம்ஐ என்ற பெயரில் வெளியிட்டு வரும் புதிய மொபைல்கள் மூலம் ஐபோனுக்கே சவால் விடுத்து வருகிறது.

இந்நிலையில், ரெட்மியை தனி நிறுவனமாக்க ஜியோமி முடிவு செய்துள்ளது. ரெட்மி நிறுவனம் அடுத்ததாக ரெட்மி 7 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. 48 மெகாபிக்ஸல் கேமரா கொண்ட இந்த மொபைல் மீது அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது.

‘ரெட்மி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதிலும், ஜியோமி நிறுவனம், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பிலும் ஈடுபடும்’ என ஜியோமி தலைவர் லெய் ஜுன் தெரிவித்துள்ளார்.