அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!

அறந்தாங்கி அருகே அழியாநிலையில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி அருகே அழியாநிலையில், பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று அதிகாலையில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லெட்சுமி ஹோமம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பஞ்சமுக ஆஞ்சனேயர், விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு அனைத்துவித சிறப்பு அபிஷேகங்கள் செய்து, மேல தாளங்கள் முழங்க விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு வெள்ளிகவசம் சாற்றி மலரால் அலங்காரம் செய்து தீப ஆராதனை நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வருகைதந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு விஸ்வரூப ஆஞ்சனேயர் நற்பணி மன்றம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அறந்தாங்கி போலிீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்ட நிலையில், அறந்தாங்கி போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.