இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622 ரன்களை குவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு பாலோ ஆன் வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி கடைசியாக 31 வருடங்களுக்கு முன் கடந்த 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெற்று விளையாடியது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய தோல்வி அடைந்தது. அதன்பின் 31 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் வாங்காமலே தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஆஸ்திரேலியாவிற்கு இன்று இந்தியாவிடம் பலமான அடி விழுந்துள்ளது.
மேலும் மொத்தமாக ஆஸ்திரேலியா அணி 2005 ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்றுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பாலோ ஆன் வாங்கியது. தற்போது 14 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்றுள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மைல்கல் ஆகும்.
டாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் புஜாரா, ரிஷப் பாண்ட் அசத்தல் ஆட்டத்தினால் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 83.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்து இருந்தது. போட்டியின் 3-ம் நாளான நேற்று மாலை போதிய வெளிச்சமின்மையால் முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.
வானம் தெளிவாக இருந்தால் ஆட்டத்தை அரைமணிநேரம் முன்கூட்டியே தொடங்க நடுவர்கள் திட்டமிட்ட நிலையில் சிட்னியில் காலையில் இருந்து பலமான தூறலும், மேகமூட்டமாக இருந்ததால் உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லாமல் இருந்தது.
பின்னர் ஓரளவு வெளிச்சம் வந்த காரணத்தால் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்த ஆரம்பித்தனர். நேற்றைய ஸ்கோருடன் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கம்மின்ஸ் 25 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கம்ப் 28 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். அதன்பின் முகமது ஷமி பந்துவீச கம்மின்ஸ் க்ளீன் போல்டாகி 25 ரன்களில் வெளியேறினார்.
பும்ரா வீசிய 95 ஓவரில் ஹேண்ட்ஸ்கம்ப் ஸ்டெம்ப்கள் பறக்க போல்டாகி, 37 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த லயன், குல்தீப் யாதவ் சுழலில் எல்பிடபிள்யு முறையில் டக் அவுட்டில் வெளியேறினார். ஆனால் இறுதியாக வந்த ஹேசல்வுட், ஸ்டார்க்குடன் இணைந்து இந்திய அணிக்கு தொல்லை கொடுத்தார். குல்தீப் பந்துவீச்சில் ஹேசல்வுட் கொடுத்த கேட்சை விஹாரி தவறவிட்டார். இறுதியில் குல்தீப் பந்தில் ஹேசல்வுட் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து 21 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 104.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நிலையில் போதிய வெளிச்சமின்மையால் முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த போட்டிக்கு முடிவுகள் கிடைக்க வேண்டும் என்றால் வருண பகவான் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் தொடர் ஏற்கனவே யாருக்கு என உறுதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.