வடக்கு ஆளுனர் யார் என்பது அனேகமாக நாளை மதியத்திற்கு முன்னதாக தெரிந்து விடும்.
நேற்று முன்தினம் ஐந்து மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர். கிழக்கு, வடமேல், வடமத்திய, மத்திய, மேல் மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர். நான்கு மாகாண ஆளுனர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை
இதில் வடக்கு ஆளுனர் யார் என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.
மார்ஷல் பெரேரா வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், பிந்தைய நிலவரத்தில் மேலும் சிலரது பெயர்கள் இந்த பரிசீலனை பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதியின் யாழ் இணைப்பாளர்களால் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன.
எனினும், இப்பொழுது பட்டியலில் மார்ஷல் பெரேரா மட்டுமல்ல, இப்போது ரெஜினோல்ட் குரேவின் பெயரும் மீள பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.
அது தவிர, யாழ் எம்.பி அங்கஜன் இராமநாதனின் பெயரும் தீவிரமாக பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.
அங்கஜனை ஆளுனராக்கினால், அவரது எம்.பி வெற்றிடத்திற்கு ஒருவரை நியமிக்கும் வாய்ப்பும் உள்ளதால், இந்த பட்டியலில் அங்கஜனது பெயரும் தீவிரமாக பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது. இதேவேளை, அங்கஜனின் தந்தை சதாசிவம் இராமநாதனும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இதேவேளை, ஈ.பி.டி.பியின் தெரிவுகள் இரண்டும்- சி.தவராசா, கலாநிதி விக்னேஸ்வரன்- நியமிக்கப்பட வாய்ப்பில்லையென தெரிகிறது.
ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரிடமே தமது சிபாரிசை ஈ.பி.டி.பி தரப்பு சமர்ப்பித்திருந்தது. அதன்பின்னர், கடந்த புதன்கிழமை மதிய உணவின் பின்னர் ஜனாதிபதி தொலைபேசியில் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்திருக்கிறார்.
அப்போது டக்ளஸ் தேவானந்தா உறக்கத்தில் இருந்தார். அதனால் அழைப்பை தவறவிட்டார்.
அதன்பின்னர், வெள்ளிக்கிழமை ஆளுனர்கள் நியமனம்வரை டக்ளஸ் தேவானந்தாவால் ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.
பலமுறை முயன்றும் முடியவில்லை. ஆளுனர் விவகாரத்தில் ஜனாதிபதி வேறு முடிவில் இருப்பதாலேயே டக்ளஸின் அழைப்பை அப்போது ஏற்கவில்லையென கருதப்படுகிறது.
வடக்கு ஆளுனராக பதவியிலிருந்த ரெஜினோல்ட் குரே நீக்கப்படுவார் என்றுதான் முன்னர் கருதப்பட்டது.
அவரது வீட்டில், சுதந்திரக்கட்சியின் அதிருப்தியணியினர் ஒன்று கூடியிருந்தனர் என செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், அங்கு கூட்டம் இடம்பெறவில்லை, ரெஜினோல்ட் குரேவிடம் தமது நிலைப்பாட்டை புரிய வைக்கவே அந்த அணி வந்ததாக தெரிகிறது.
எனினும், அவர்களின் நோக்கம், திட்டம் பற்றிய பேச்சுக்களை அனுமதிக்காமல், சம்பிரதாய பேச்சுக்களுடனேயே திருப்பி அனுப்பியதில் ரெஜினோல்ட் குரேவின் மனைவிதான் மும்முரமாக இருந்துள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் இரண்டு மூன்று முறை ஜனாதிபதியை நேரில் சந்தித்தும், இதைப்பற்றி தகவல் தெரிவிக்கவில்லையென்பதே, குரே மீது ஜனாதிபதிக்கிருந்த கோபம்.
ஜனாதிபதியை இந்த விவகாரத்தில் குரே சமாதானப்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் குரே ஒரு தன்னிலை விளக்கமளித்திருந்தார்.
ஜனாதிபதியை சமாதானப்படுத்த, அல்லது சமாதானமடைந்த ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அந்த விளக்கம் இடம்பெற்றிருக்கலாமென கருதப்படுகிறது.
எனினும், மார்ஷல் பெரேரா, ரெஜினொல்ட் குரே, அங்கஜன் இராமநாதன் ஆகியோரே இந்த பட்டியலில் அதிக வாய்ப்புள்ளவர்களாக தெரிகிறது.
இருந்தாலும், முடிவெடுக்க வேண்டியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதையும் நினைவுபடுத்துகிறோம். எந்த கணத்திலும், எதுவும் நடக்கலாம். எதுவும் மாறலாம்!