சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் வெள்ளியன்று நடந்த படுகொலை தொடர்பில் மர்மம் விலகாததால் விசாரணை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சுவிஸில் பெர்ன் மற்றும் ஜுரா மண்டலங்களுக்கு நடுவே அமைந்துள்ள Moutier நகர மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது, அப்பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு மர்ம மரணம்.
Moutier நகரில் அமைந்துள்ள தாய்லாந்து குடும்பத்தாருக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றில் குறித்த நபர் கடந்த வெள்ளியன்று இரவு தங்கியுள்ளார்.
இந்த நிலையில், நள்ளிரவு கத்திக்குத்து காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இது ஒரு படுகொலை என்று பொலிசார் உறுதி செய்துள்ள நிலையில்,
கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் போதிய தகவல் ஏதுமின்றி விசாரணை அதிகாரிகள் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கொடூர சம்பவம் அரங்கேறி இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், தாய்லாந்து குடும்பத்தாருக்கு சொந்தமான குடியிருப்பில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும்,
தற்போது அந்த குடியிருப்பானது வாடகைக்கு விடப்பட்டு வருவதாகவும், அடிக்கடி பலர் இங்கு வாடகைக்கு தங்கிச் செல்வது உண்டு என்பது தொடர்பில் மட்டும் தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும், ஆசிய நாட்டவரான உணவு விடுதி ஊழியர்களுக்கே குறித்த குடியிருப்பானது அதிகமுறை வாடகைக்கு தரப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களில் சிலருக்கு மட்டுமே இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்துள்ளது. பலருக்கும் அந்த தாய்லாந்து குடும்பம் தொடர்பாக தகவல் ஏதும் தெரிந்திருக்கவில்லை.
இந்த கொலை வழக்கு தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையே இந்த வழக்கின் முடிவை இறுதி செய்யும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.