அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கொள்ளையர்களால் துப்பாக்கி தாக்குதலுக்கு இரையான இந்திய இளைஞருக்கு நண்பர்கள் உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரத்தில் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொள்ளையர்களால் துப்பாக்கு தாக்குதலுக்கு இரையானார்.
ஜனவரி 3 ஆம் திகதி இரவு உணவு விடுதி ஒன்றில் இருந்து உணவுடன் தங்கும் அறைக்கு திரும்பிய சாய்கிருஷ்ணா என்ற அந்த இளைஞரை கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியுள்ளது.
இதில் தோள் மற்றும் கழுத்து பகுதிகளில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இளைஞர் சாய்கிருஷ்ணா குற்றுயிராக மீட்கப்பட்டார்.
அவரது காரில் இருந்த பொருட்களுடன் மாயமான கும்பல், சாய்கிருஷ்ணாவை அந்த கொடும் தணுப்பில் தவிக்க விட்டு சென்றுள்ளது.
தெற்கு மிச்சிகனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பயின்று வரும் சாய்கிருஷ்ணா தற்போது டெட்ராய்ட் நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வருகிறார்.
அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அங்குள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இதனையடுத்து சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டும் பணியை சாய்கிருஷ்ணாவின் நண்பர்கள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.