வவுனியாவில் கைத்துப்பாக்கிகளை வீசிவிட்டு மர்மநபர் தலைமறைவானார் என பொலிசார் குறிப்பிட்ட சம்பவத்தில், இதுவரை மூவர் கைதாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதில் பெண்ணொருவரும் அடங்குகிறார்.
வவுனியா புதூர் பகுதிக்கு செல்லும் வீதியில் பொலிசாரை கண்டதும் பொதியொன்றை வீசிவிட்டு மர்மநபர் காட்டுக்குள் தப்பி சென்றதாக பொலிசார் தெரிவித்தனர். அவர் வீசிவிட்டு சென்ற பொதிக்குள் கைத்துப்பாக்கி, கைக்குண்டு என்பன மீட்கப்பட்டன.
இதையடுத்து புதூர், ஆலங்குளம், புதுக்குளம் பகுதிகளில் இராணுவம், அதிரடிப்படை, பொலிசார் இணைந்து தேடுதல் நடத்தினர். இந்த தேடுதல், விசாரணைகளையடுத்து பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்த பொதிக்குள் இருந்த சிம் அட்டையொன்றின் அடிப்படையில் குறிப்பிட்ட பெயரையுடைய ஒரு நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார். அனாமதேயமாக இயங்கும் தமிழ் இணையத்தளம் ஒன்றின் செய்தியாளரே தேடப்படுகிறார்.
கைதானவர்களில் ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடியவர் மற்றும் செய்தியாளர் ஆகியோர் உள்ளடங்குகிறார்களா என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை.