இலங்கை வீரர் திசாரா பெரேரா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசி, முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
மவுண்ட் மவுன்கனுவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் இலங்கை அணியில் திசாரா பெரேரா அதிரடியாக 74 பந்துகளில் 140 ஓட்டங்கள் குவித்தார்.
இதில் 13 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம், முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை திசாரா பெரேரா முறியடித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜெயசூர்யா 11 சிக்சர்கள் அடித்திருந்தார்.
இதுவே, இலங்கை வீரர் ஒருவர் ஒரு போட்டியில் அடித்த அதிக சிக்சர்களாக இருந்தது. இந்த சாதனையை 13 சிக்சர்கள் விளாசியதன் மூலம் பெரேரா முறியடித்துள்ளார். மேலும் 7வது வீரராக களமிறங்கி வீரர் ஒருவர் அடித்த 3வது அதிகபட்ச ஓட்டங்கள்(140) என்ற பெருமையையும் பெரேரா பெற்றுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு 7வது வீரராக களமிறங்கி டோனி 139 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஆனால் பெரேரா 140 ஓட்டங்கள் எடுத்து டோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்நிலையில் இந்த சாதனை சதம் குறித்து பெரேரா கூறுகையில்,
‘எனது முதல் சதமாக இது அமைந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கடைசி 8 ஆண்களாக 8வது மற்றும் 9வது வரிசையிலேயே களமிறங்கி வந்தேன். ஆனால், 7வது வரிசையில் களமிறங்க பயிற்சியாளர் எனக்கு வாய்ப்பு அளித்தார்.
வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் நான் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. இந்த இன்னிங்சிஸ் முழுவதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். எனது துடுப்பாட்டத்தில் கடுமையாக ஈடுபட்டேன். பழிவாங்க வேண்டும் என்பதை விட வெற்றி பெற என்ற முயற்சிக்காகவே ஐந்து சிக்சர்களை விளாசினேன்’ என தெரிவித்துள்ளார்.