மகளுடன் சேர்ந்து குடும்பம் நடத்துமாறு கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தனது தந்தையுடன் சேர்ந்து மாமனார்-மாமியாரை ஓட… ஓட… அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது45). இவரது மனைவி வனிதா (42). இவர்களது மகள் முனீஸ்வரி (23).
இவருக்கும், நரிக்குடி அருகே உள்ள கீழசெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் கணேசனுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு முன்பே கணேசனுக்கும், கீழசெம் பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணேசன்-முனீஸ்வரி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் தொடர்பு வைத்திருந்த பெண்ணுடன் திருப்பூர் சென்று கணேசன் தங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரி தனது நிலைமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கணேசனை சமரசம் செய்து முனீஸ்வரியுடன் சேர்த்து வைத்தனர். இருவரும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். அங்கேயும் கணேசன் மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். இதனால் வெறுப்படைந்த முனீஸ்வரி கணவர் மீது திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு கணேசன்-முனீஸ்வரி தம்பதியர் மீண்டும் வீரசோழனுக்கு வந்து குடியேறினர். இந்த நிலையில் நேற்று இரவு கணேசனிடம் பேசுவதற்காக முனீஸ்வரியின் பெற்றோர் செந்தில்வேல்-வனிதா வந்தனர்.
அப்போது அவர்கள் மகளிடம் பிரச்சினை செய்யாமல் குடும்பம் நடத்துமாறு கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், அவரது தந்தை பாண்டி ஆகியோர் செந்தில் வேல்-வனிதாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். ஆத்திரம் அடங்காத இருவரும் அவர்களை ஓட…ஓட… விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் செந்தில்வேல் கை, கால்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். வனிதாவையும் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரசோழன் போலீசார் சம்பவ இடம் வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் கணேசன் சரண் அடைந்தார். தலைமறைவாகி இருந்த பாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.