தங்கள் முதல் குழந்தையை விரைவில் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் மேகனுக்கும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, வழக்கமாக ராஜ குடும்பத்தில் வழங்கப்படும் பட்டம் எதுவும் வழங்கப்படாது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளதையடுத்து அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அப்படி ஒரு பட்டத்தை பயன்படுத்துவதற்கு தம்பதிக்கு மகாராணியார் அனுமதியளிக்க வேண்டும்.
இந்நிலையில் அவர் ஹரியின் குழந்தைக்கு அனுமதியளிப்பாரா இல்லையா என்னும் கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
நூறு ஆண்டுகளுக்குமுன் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெளியிட்ட ஒரு பிரகடனத்தின்படி, இளவரசர் சார்லஸின் மூத்த மகனின் மூத்த மகனுக்கு மட்டுமே அந்த கௌரவம் தானாகவே வந்து சேரும்.
ராஜ குடும்பத்தின் மற்ற குழந்தைகளுக்கு மகாராணியார் பட்டம் கொடுத்தால்தான் உண்டு.
ஆனால் 2012ஆம் ஆண்டு, நாடாளுமன்ற அனுமதியின்றி மகராணியாருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர் வில்லியம் கேட்டின் மூத்த மகனுக்கு மட்டுமின்றி, அவர்களது அனைத்து குழந்தைகளுக்கும் HRH (His or Her Royal Highness) என்னும் பட்டம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், இளவரசர் ஹரி, மேகனுக்கு குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், அவர்களுக்கு அத்தகைய அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இதற்கிடையில், முன்பு இளவரசர் ஹரி, தனது பிள்ளைகள் ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஒரு வேளை அதனால்தான் இன்னும் அவர்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பட்டம் வழங்கப்படவில்லையோ என்னும் பேச்சு ஒருபுறம் அடிபடுகிறது.
இன்னொருபக்கம் சார்லஸ், தனது மூத்த மகனின் குழந்தைகளுக்கு மட்டுமே HRH பட்டம் வழங்க வேண்டும் என முடிவெடுத்திருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.