இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வந்தது ட்ராவில் முடிந்தது. 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரினை இந்திய அணி கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622 ரன்களை குவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு பாலோ ஆன் வழங்கியது.
ஆஸ்திரேலியா அணி கடைசியாக 31 வருடங்களுக்கு முன் கடந்த 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெற்று விளையாடியது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய தோல்வி அடைந்தது. அதன்பின் 31 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் வாங்காமலே தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஆஸ்திரேலியாவிற்கு இந்தியாவிடம் பலமான அடி விழுந்தது.
மேலும் மொத்தமாக ஆஸ்திரேலியா அணி 2005 ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்றுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பாலோ ஆன் வாங்கியது. தற்போது 14 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்றுள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மைல்கல் ஆகும்.
இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நிலையில் போதிய வெளிச்சமின்மையால் முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த போட்டிக்கு முடிவுகள் கிடைக்க வேண்டும் என்றால் வருண பகவான் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. வானம் தெளிவாக இருந்தால் ஆட்டத்தை அரைமணிநேரம் முன்கூட்டியே தொடங்க நடுவர்கள் திட்டமிட்ட நிலையில் சிட்னியில் காலையில் இருந்து பலமான தூறலும், மேகமூட்டமாக இருந்ததால் இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இதனால் இந்தியா எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை வருணபகவான் தட்டி பறித்துவிட்டார்.
இந்தியா இந்த தொடரை எளிதாகவே வென்றுவிட்டது என பலரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். வார்னர், ஸ்மித் என இரு பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தோல்வியடைந்தது என்று கூறுவது ஆஸ்திரேலியாவின் இயலாமையை காட்டுகிறது. மாற்று வீரர்களை உருவாக்காமல் தனி நபர்களை நம்பியுள்ளதா ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட் அணியினை ஆஸ்திரேலியா அணி கட்டமைக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட்டை பொறுத்தவரை அசைக்க முடியாத அணியாகவே வலம் வந்தது. அதற்கு அதனுடைய வெற்றி புள்ளி விவரங்கள் பதில் என்றும் சொல்லுகிறது. சிங்கத்தை அதன் குகையிலே வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அப்படியே வீழ்த்தினாலும் எதிரணியை சீண்டிவிட்டு தோல்வி பாதையில் தள்ளுவதும் அவர்களின் வழக்கமாகும்.
இந்த இந்திய அணி வரலாறு படைக்கும் முன்னே கும்ளே தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்று வெற்றியை பெற்றிருக்க வேண்டும். 2007 2008 ஆம் ஆண்டு தொடரில் இந்திய அணி மெல்போர்ன் போட்டியில் தோல்வியடைந்த பிறகு சிட்னி டெஸ்டில் சச்சின் ஷேவாக்கின் அசத்தல் விளையாட்டினால் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஆனால் நடுவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முறைகேடு நடவடிக்கைகளினால் இந்திய அணி நூலிழையில் தோல்வியை சந்தித்தது.
அந்த போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த இந்திய கேப்டன் கும்ளே ஒரு அணிதான் விளையாடியது இன்னொரு அணி என்ன செய்தது என்பதை நீங்களே அறிவீர்கள் என குறிப்பிட்டு இருந்தார். அந்த போட்டியில் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது தரத்தினை குறைத்து கொள்ளும் அளவிலே விளையாடியது அனைவரும் அறிந்ததே. அன்றைய சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன், ஷேவாக், காம்பிர், கும்ளே, டோனி, ஹர்பஜன் உள்ளிட்ட நட்சத்திர அணி ஆனது அமைதியாக அதனை கடந்தது கிரிக்கெட் உலகையே பெருமையடைய வைத்தது.
அந்த தொடரில் இந்திய அணி பெர்த் டெஸ்டில் வரலாற்று வெற்றி, அடுத்து நடைபெற்ற அடிலெய்டு போட்டியில் ஷேவாக்கின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க ட்ரா ஆனது. இதனால் இந்த தொடரை இந்திய அணி 2 க்கு ஒன்று என்று கைப்பற்ற வேண்டியதை 2 க்கு ஒன்று கணக்கில் இழந்தது. எப்போதுமே ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இந்திய வீரர்களை உளவியல் ரீதியாக தாக்குதல் தொடுப்பது வழக்கம். அதிலேயே இந்திய அணி தோல்வியை சந்தித்து கொண்டிருக்கும். ஆனால் கங்குலி தலைமையில் 2003 இல் சென்ற இந்திய அணியும், 2007 இல் சென்ற கும்ளே தலைமையிலான இந்திய அணியும் அதனையும் தாண்டி மனபலத்துடன் சாதித்தது.
ஆனால் அதே உளவியல் ரீதியான தாக்குதல்கள் தான் இன்று ஆஸ்திரேலிய அணியை பாதித்துள்ளது. ஸ்மித், வார்னர் இல்லை என்ற எண்ணமே ஆஸ்திரேலியாவை நம்பிக்கையற்றவர்களாக மாற்றிவிட்டது. ஆனால் ஸ்மித், வார்னர் இருந்த போதுமே ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இந்திய அணி பலமான அணியை தோற்கடித்ததோ, பலம் இல்லாத அணியை தோற்கடித்ததோ ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்றை பதிவு செய்துள்ளது. இனிமேல் ஆஸ்திரேலியா செல்லும் எந்த ஆசிய அணிக்கும் ஒரு உளவியல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த முறை இந்திய அணியை உளவியல் ரீதியாக தாக்க முடியாதது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைகிறது.
தோல்விக்கு காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் பேட்டிங், பவுலிங் சரியில்லை, அணித்தேர்வு சரியில்லை என சப்பக்கட்டு காரணங்களை கூறிக்கொண்டு உள்ளார்கள். மேலும் விளையாடிய அணியினரோ பிட்ச் சரியில்லை என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். எது எப்படியோ ஆஸி அணியை முதன்முறையாக புலம்ப வைத்ததே இந்திய அணியின் வரலாற்று வெற்றிதான்.