காஞ்சிபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன 2 வயது குழந்தை ஹரிணியை மீட்டு தர கோரி நரிக்குறவ பகுதியை சேர்ந்த பெற்றோர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் RG .ஆனந்த் அவர்களிடம் புகார் அளித்தனர்.
புகார் வந்த மறு தினமே RG.ஆனந்த் காஞ்சி மாவட்டம், செங்கல்பட்டு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, காணாமல் போன குழந்தையை உடனே மீட்க காவல்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து, அக்குழந்தையை நூதன முறையில் மீட்க காவல்துறைக்கு ஒரு புதிய வழிமுறையை தெரிவித்தார்.
இதனையடுத்து அந்த குழந்தை துரித முயற்சியினால் காப்பாற்றபட்டுள்ளது. மேலும் துரிதமாக செயல்பட்டு குழந்தை ஹரிணியை மீட்டு தந்த காவல்துறை ஆணையர் திரு. சந்தோஷ் அவர்களுக்கும் உடன் பணியாற்றிய அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் R.G.ஆனந்த் அவர்கள் நன்றி தெரிவித்து பாராட்டினார்.
ஹரிணி மீண்டும் கிடைத்தது தொடர்பாக பேசிய அவரது தாய், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல பேர் தங்களின் குழந்தைகளை தொலைத்துள்ளனர் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால், அதன் வலி என் மகள் தொலைந்தபோது தான் எனக்குத் தெரிந்தது. நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை, நான் பத்து மாதம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற குழந்தையைத் தொலைத்துவிட்டு எப்படி நிம்மதியாக இருக்க முடியும். கடவுள் ஆசீர்வாதத்தால் நல்லபடியாக என் குழந்தை கிடைத்துவிட்டது. எனது குழந்தையை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.