ஆவடியை அடுத்த பட்டாபிராம் கோபாலபுரம் சித்தேரிக்கரையில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் புருஷோத்தமன்.18 வயது நிறைந்த இவர் அம்பத்தூரில் உள்ள ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேலும் இவர், பகுதி நேரமாக பட்டாபிராம் பகுதியில் உள்ள ஒரு பங்க்கில் ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்பும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆட்டோக்களில் வந்த சிலர், கியாஸ் நிரப்ப வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 4 பேர், தங்களது ஆட்டோவில் சீக்கிரமாக கியாஸ் நிரப்ப சொல்லி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு புருஷோத்தமன், ஏற்கனவே வரிசையில் சில ஆட்டோக்கள் நிற்கின்றது, அதற்கு கியாஸ் நிரப்பிவிட்டு உங்களது ஆட்டோவிற்கு நிரப்புகிறேன், வரிசையில் நில்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஒருவர், திடீரென தனது கையில் வைத்திருந்த அரிவாளால் புருஷோத்தமனை தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தம் வெளியேறி புருஷோத்தமன் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் 4 பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த புருஷோத்தமன், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டு, தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆட்டோவில் வந்த அந்த 4 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.