முன்னாள் முதலமைச்ருயும், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் வைத்து செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை,
முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
ஆனால் இந்த திட்டத்தை முன்பு காங்கிரஸ் கொண்டுவர ஆலோசித்தபோது, பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் தற்போது அவர்கள் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வராத திட்டங்களை தற்போது கொண்டு வருகிறார். இதன்மூலம் அவர் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று கனவு காண்கிறார். அதாவது அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாத, ஏழை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இப்படியொரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.
அவர் என்னதான் திட்டத்தை கொண்டு வந்தாலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைத்தான் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். அதனால் மீண்டும் பிரதமராக ஆகிவிடலாம் என்று நினைக்கும் நரேந்திர மோடியின் கனவு நினைவாகாது என்று சித்தராமையா கூறினார்.