காட்டு யானை தாக்கி ஆதிவாசி பெண் பலி!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வெள்ளியங்கிரி மலை பகுதியில் தற்போது இடப்பெயர்ச்சி காலம் என்பதால் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முள்ளாங்காடு ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியை சார்ந்த, சாடியம்மாள் என்பவர் விறகு பொறுக்க அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென எதிரே வந்த ஒற்றை யானை சாடியம்மாளை தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். அப்போது யானையின் பிளிரல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் வீரகாளியம்மன் கோவில் அருகே சென்று பார்த்தபோது சாடியம்மாள் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறைக்கும், ஆலாந்துறை காவல் துறைக்கும் தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த காவல் துறையினர், சாடியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த வாரம் இதே இடத்தில் கிட்டி மூப்பன் என்பவர் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும், அதே கிராமத்தை சார்ந்த மற்றொருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் முள்ளாங்காடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.