இந்த முறையில் ரசம் வைத்து பாருங்கள்!!

ரசம் நம் தென்னிந்திய உணவு வகையில் ஒரு முக்கிய இடம் பிடித்த உணவு.

இது இல்லாத விருந்துகளே இருக்காது. இது ஜீரணத்திற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கவும் மற்றும் கபம், சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது.

ரசத்தில் பலவகை இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்தமானது கல்யாண வீடுகளில் செய்யப்படும் ரசமே. அதன் சுவையே மிக அலாதியானது.

அது போன்ற சுவையானக் கல்யாண ஸ்டைல் ரசத்தை வீட்டில் செய்ய அனைவருமே விரும்புவார்கள்.

வாருங்கள் இன்று கல்யாண ரசம் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

கல்யாண ரசம் செய்யத் தேவையான பொருட்கள்

புளி பாதி எலுமிச்சை அளவு கரைத்து வைக்கவும்.

பூண்டு பத்து பல் தோலுடன் தட்டி வைக்கவும்.

தக்காளி ஒன்று இதைப் புளிக் கரைசலில் நன்கு கையால் மசித்து விடவும்.

கடுகு, சீரகம் தாளிக்க சிறிதளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

பச்சைமிளகாய் ஒன்று

எண்ணெய், உப்பு தேவையான அளவு

கல்யாண ரசம் பொடி 3 டீஸ்பூன்.

ரசம் பொடி செய்முறை

துவரம் பருப்பு 250 கிராம்
மிளகு 75 கிராம்
சீரகம் 75 கிராம்
தனியா 30 கிராம்
வரமிளகாய் 20
காய்ந்த கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
பெருங்காயம் 10 கிராம்
மஞ்சள் தூள் 4 டீஸ்பூன்

இதில் மஞ்சள் தூள் தவிர்த்து மீதி அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள் தூளை கலந்து ஒரு பாத்திரத்தில் ஸ்டோர் செய்து தேவைப்படும்போது உபயோகிக்கவும்.

கல்யாண ரசம் செய்முறை

1. புளியை நன்கு கரைக்கவும்.

2. அதில் இடித்து வைத்த பூண்டு, நடுவில் கீறிய பச்சை மிளகாய், மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பிசையவும்.

3. இதில் 3 அல்லது 4 டீஸ்பூன் ரசப்பொடி, மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி உப்பு காரம் சரிபார்க்கவும். அதிக காரம் தேவைப்படுவோர் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

4. அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

5.இப்பொழுது இதில் புளிக்கரைசலை சேர்க்கவும். இதை நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடவும்.

6. பின்னர் இதில் கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து ஒரு மூடி போட்டு பத்து நிமிடம் மூடி விடவும்.

7. இப்பொழுது சுவையான கல்யாண ரசம் தயார்.

குறிப்பு- பொதுவாக ரசத்தை கொதிக்க வைப்பதில்லை. ஆனால், இந்த கல்யாண ரசத்தை பத்து நிமிடம் கொதிக்க விடவேண்டும் அப்பொழுது தான் சுவை அதிகரிக்கும்.