எச்சரிக்கை..! கொசு மருந்து அடிக்க வருவதாக கூறி அரங்கேறும் சதிவேலை..?

திருப்பூரில் மாநகராட்சி ஊழியர் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் எல்.ஆர்.ஜி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம் . இவர், எல்.ஐ.சி நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சிவகாமி.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரு நபர்கள் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று தங்களை மாநகராட்சி ஊழியர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

பின்னர், வீட்டில் இருந்த சிவகாமியிடம் கொசு மருந்து அடிக்க வேண்டும் தண்ணீர் இருக்கும் பாத்திரங்களை காட்டும்படி கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, சிவகாமி வீட்டின் அருகில் தண்ணீர் உள்ள பகுதிக்கு ஒருவரை அழைத்து சென்றுள்ளார். இன்னொருவர் வீட்டின் உள்ளே சென்று 18 1/2 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை திருடி கொண்டார்.

பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து, சிவகாமி மற்றும் அவரது கணவர் இதுகுறித்து மத்திய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில், திங்களன்று திருப்பூர், தாடிக்காரன் முக்கு பகுதியில் மத்தியகாவல் ஆய்வாளர் சக்திவேல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, சந்தேகப்படி வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் ஆம்பூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் காந்திராஜ் என்பது தெரியவந்தது.

இவரும், இவரது நண்பரும் திட்டம் போட்டு பாலசுப்பிரமணியம் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. மேலும், காந்திராஜிடம் இருந்து 9 பவுன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இன்னொருவரை மத்திய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.