20 அடி உயர அஜித் பட கட்-அவுட்டில் மாலை போட்ட ரசிகர்களுக்கு நடந்த விபரீதம்!

திருக்கோவிலூர் பகுதியில் அஜித் பட கட்-அவுட் சரிந்து விழுந்ததில், பாலபிஷேகம் செய்து கொண்டிருந்த 6 ரசிகர்கள் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு பிரபல தமிழ் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக அவருடைய ரசிகர்கள் பலரும் திரையரங்குகளின் முன் பட்டாசு வெடித்து படம் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருக்கோவிலூர் பகுதியில் ஸ்ரீனிவாசா திரையரங்கிலும் அஜித் படம் திரையிடப்பட்டிருந்தது. இதனை காண்பதற்காக 200க்கும் மேற்பட்ட ரசிகர் பட்டாளம் திரையரங்கின் முன் குவிந்திருந்தனர்.

அப்போது சில ரசிகர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 20 அடி உயர கட்-அவுட் மீது ஏறி நின்று மாலை போட்டு பாலாபிஷேகம் செய்துகொண்டிருக்கும் போதே திடீரென சரிந்து விழுந்தது.

இதனை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.

இந்த சம்பவத்தில் அஜித் ரசிகர்களான ஏழுமலை, அருள், ஸ்ரீதர், முத்தரசன், பிரபாகரன், பிரதாப் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.